புதிய அரசியல் கட்சி தொடங்குவேன்! நடிகர் பிரகாஷ்ராஜ் அதிரடி அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றி பெற்றார்.

பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து தெரிவித்த பிரகாஷ்ராஜ், தனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரகாஷ்ராஜ் கூறுகையில், ‘கடந்த 6 மாதமாக பெங்களூரு முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன்.

போலி தேசபக்தியையும், வெறுப்பையும் ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால், மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன்.

பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேட்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக கூறுகிறார்கள். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

இன்னும் ஒரு வருடத்தில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வருகிறது. அதில் எங்களது வேட்பாளர்களை களம் இறக்கி, சிறிய அளவில் இருந்து ஆதரவை பெருக்கப் போகிறேன். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். அரசியல் கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers