வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து வேறு பெண்ணை மணக்க முயன்ற கணவன்.. மனைவி, மகள் எடுத்த முடிவு.. சுவற்றில் இருந்த கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் நெய்யாற்றின்கரை மாராரி முட்டத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி லேகா (43). இவர்களின் மகள் வைஷ்ணவி (19).

வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரனுக்கு உடல்நலப்பிரச்சனை வந்ததால் சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந்நிலையில் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் சந்திரன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.

இதற்கான வட்டி தொகையை திருப்பி தர முடியாமல் சந்திரன் திணறியதாகவும், இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சந்திரன், லேகாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த லேகா தனது மகள் வைஷ்ணவியுடன் சேர்ந்து தீக்குளித்து சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக வரதட்சணை கொடுமையால் லேகா மற்றும் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொண்ட அறையின் சுவரில் ஒரு கடிதம் ஒட்டப்பட்டு இருந்தது.

அதில், கணவர் சந்திரன், அவருடைய தாயார் கிருஷ்ணம்மா (80) மற்றும் உறவினர்கள் சாந்தா, காசி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.

வங்கியில் வாங்கிய கடனை கணவர் சந்திரன் முறையாக திருப்பி செலுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் மீது சூனியம் வைக்க முயற்சி செய்தனர். மேலும் எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்யவும் முயன்றனர்.

வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவர் கேரளாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்ததும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் இருவரின் கையெழுத்தும் இருந்தது.

இருவரும் தற்கொலை செய்து கொள்ள வங்கி எந்த வகையிலும் காரணம் இல்லை என பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. திடீர் திருப்பம் ஏற்படுத்திய இந்த வழக்கில் சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்