6- வயது சிறுமியின் ஆசையைக் கேட்டு கலெக்டர் செய்த நெகிழ்ச்சி செயல்... வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

தேர்வில் தான் கலெக்டர் ஆக வேண்டும் என்று விரும்பிய பள்ளி மாணவியை நேரில் அழைத்து, கலெக்டர் அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில், ஆங்கில பாடத்திற்கான தேர்வில் நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள்? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதில் 6-ஆம் வகுப்பு மாணவியான மனோபிரியா எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடைத்தாளை திருத்திய ஆசியர் அவரின் பதிலைக் கண்டு பெரிமிதம் அடைந்தது மட்டுமின்றி, இந்த தகவலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதியிடம் தெரிவித்துள்ளார்.

அவர் உடனடியாக மாவட்ட கலெக்டர் அன்பழகனின் எண்ணுக்கு வாட்ஸ்-அப் வாயிலாக இதை தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த மாவட்ட கலெக்டர், அந்த மாணவியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கி பதக்கம் பெற்ற அப்பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்போது கலெக்டர் அன்பழகன் யாரும் எதிர்பாராத வகையில், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மாணவி மனோபிரியாவை அமரவைத்து, நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறி மனதார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers