நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை.. டெல்லி முதல்வரை அறைந்த இளைஞரின் பேட்டி!

Report Print Kabilan in இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் அறைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை என அந்த இளைஞர் பேட்டியளித்துள்ளார்.

டெல்லி தொகுதியில் உள்ள மோதி நகரில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 4ஆம் திகதியன்று பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர், தொண்டர்கள் படையுடன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த கெஜ்ரிவாலை கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ஜீப்பில் தாவி கன்னத்தில் அறைந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற குறித்த இளைஞரை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, டெல்லி பொலிசார் சுரேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இளைஞர் சுரேஷ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை. எப்படி அறைந்தேன் எனவும் தெரியவில்லை.

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நான் செய்த இந்த தவறின் பின்னணியில் யாரும் இல்லை. என் பின்னால் நின்றுக் கொண்டு யாரும் இவ்வாறு செய்யச் சொல்லி தூண்டவில்லை. இச்சம்பத்திற்கு நானே முழு பொறுப்பு.

நான் பொலிசாரின் காவலில் இருக்கும்போதும் எனக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை. பொலிசார் என்னிடம் ஒன்றை தான் கூறினார்கள். நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை தான். அதனை நான் உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்