கமலை சக போட்டியாளராகவே கருதவில்லை.... காரணம் இதுதான்: சீமான் பொளேர் பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு கொள்கை என்பதே இல்லை எனவும், அதனால் அவரை ஒரு சக போட்டியாளராகவே தாம் நினைக்கவில்லை எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்தே களம் காண்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் புயலாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார் சீமான். இந்த நிலையில் அவரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்தும் அதன் தலைவர் கமல் தொடர்பிலும் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், கமல் தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இடது சாரிகள் தலைவர் என அனைவரையும் தமது கூட்டணிக்குள் அழைத்தவர்.

ஆனால் அவர்கள் எவரும் கமலுடன் கூட்டணி மேற்கொள்ள முன்வரவில்லை. கமலை பொறுத்தமட்டில், அவருக்கு கொள்கை என்பதே இல்லை.

நான் தமிழன், என் இனம் தமிழினம், என் தேசம் தமிழ் தேசம், இங்கு வாழுகிற என் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, வேளாண்மையை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் மொழி செத்துவிட்டது. அதனை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எனக்கு உரிமையான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கென்று ஒரு கொள்கை முடிவு இருக்கிறது.

ஆனால் கமலுக்கு அது இல்லை. முதலில் அவர் எதையும் வரையறுக்கவில்லை. அவர் இந்தியரா. திராவிடரா. தமிழரா என்பதை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும்.

ஒன்று தமிழனின் பெருமையை பேச வேண்டும். இல்லை திராவிடர் பெருமையை பேச வேண்டும். எதையாவது ஒன்றை வரையறுக்க வேண்டும்.

நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. நான் அவரை சக போட்டியாளராக நினைக்கவில்லை என சீமான் அந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்