பேரறிவாளன் தன்னிடம் வரவில்லை என்றால், தான் உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை என வருத்தமுடன் கூறியுள்ளார் அவர் தாய் அற்புதம்மாள்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதன் மீது ஆறு மாதங்கள் ஆகியும் ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேரறிவாளனை விடுதலை செய்ய அவர் தாய் அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் சென்னை வந்த ராகுல் காந்தி, 7 பேர் விவகாரத்தில் சட்டரீதியாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் அதனை ஏற்போம் என கூறினார்.
இது குறித்து பேசிய அற்புதம்மாள், சட்ட ரீதியாக என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்கிறேன் என்று ராகுல் கூறியிருப்பதில் உள்நோக்கம் உள்ளது.
சட்டரீதியாக என்று அவர் கூறத் தேவையில்லை. ஆளுநர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
ராகுலின் இந்தக் கருத்து பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகவே உள்ளது.
என் மகன் என்னிடம் வரவில்லை என்றால் நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியவில்லை என்று தழுதழுத்தக் குரலில் கூறியுள்ளார்.