ராணுவம் தொடர்பான ரகசியங்களை இலங்கைக்கு தெரிவித்ததால் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய, மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டு போவதாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே காணாமல் போனதுண்டு.
கடந்த காலத்தில் ராணுவம் சம்பந்தபட்ட ரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் வரலாறு.
தமிழக வரலாற்றிலும் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் காணாமல் போன திருட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கையை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கும் முன்பே அதை திருடி வெளியிட்டது திமுக என்பது கடந்தகால வரலாறு.
பால் கமிஷன் அறிக்கையை திருடி வெளியிட்டதால் திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அதற்கான நீதி விசாரணை கேட்டு கருணாநிதி நடைபயணம் செய்ததும் வரலாறு.
இப்படி திருடுபவர்களையும் திருட்டை நியாயப்படுத்துவர்களையும் அதற்கு துணைபோவர்களையும் தேச துரோகிகள் என்று அழைப்பதில் என்னை தவறு.
தன் சுயநல பதவி சுகத்துக்காக திருட்டுகளை நியாயப்படுத்தும் இவர்களும் ஜனநாயக திருடர்களே என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.