மீண்டும் தொகுதி மாறி போட்டியிடும் வைகோ!

Report Print Arbin Arbin in இந்தியா

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, மதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்பு சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக தனக்கென வாக்கு வங்கியை வைத்துள்ளது.

அந்த தொகுதியில் பெரும்பாலும் கூட்டணியில் கூட மதிமுகவிற்கு ஒதுக்கப்படுவது வழக்கம். கடைசியாக மதிமுக சார்பில் சிப்பிபாறை ரவிச்சந்திரன் இந்த தொகுதி எம்பியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டது.

அப்போது, சிவகாசி நாடாளுமன்ற தொகுதி நீக்கப்பட்டது. இதனால், சிவகாசி நாடாளுமன்றத்தில் இருந்த சட்டசபை தொகுதிகள் பிரித்து, புதிதாக ஏற்படுத்தப்பட்ட விருதுநகர், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 2014 மற்றும் 16 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வைகோ போட்டியிட்டார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வைகோ தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வைகோ மதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில், வைகோ போட்டியிட எந்த தொகுதி கேட்டாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியை விட்டு தர தயாராக இருப்பதாக வைகோ தன்னுடைய நிர்வாகிகளுடன் கூறியுள்ளார்.

இதனால், எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து அவர் தனது நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

அவரிடம், திருச்சி அல்லது வேறு நாடாளுமன்ற தொகுதியில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம் என்பது குறித்து மதிமுக முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இந்த இரண்டு தொகுதியில் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்து வைகோ அறிவிப்பு வெளியிடுவார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்