இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது: விஜயகாந்த் பாராட்டு

Report Print Kabilan in இந்தியா

தீவிரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்ததைத் தொடர்ந்து, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பயங்கரவாதிகள் முகாமை இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்திய விமானப்படையை பாராட்டியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப் படைக்கும், மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தே.மு.தி.க சார்பாக எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில், நமது நாட்டைப் பாதுகாப்பதற்கு தன் உயிரைத் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பதிலடி தாக்குதல் மிகப்பெரிய ஒரு ஆறுதலாக இருக்கும்.

இந்திய ராணுவம் யாருக்கும் குறைந்தது அல்ல என்பதை நிரூப்பிக்கும் வண்ணம், இன்றைய பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படையைச் சேர்ந்த அனைவருக்கும் தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்