கொள்ளி வைக்க யாருமில்லை! சொன்ன மாதிரி செத்து போயிட்டான்: தீவிரவாதிகளின் தாக்குதலால் மகனை பறிகொடுத்த தந்தை கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

என் மகன் சொன்ன மாதிரியே நாட்டிற்காக இறந்துவிட்டான் என்று தமிழகத்தைச் சேர்ந்த சிவசந்திரனின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலினால் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.

இறந்த குடும்பத்தினருக்கு தங்களால் இயன்ற உதவியை பலரும் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்த தாக்குதலில் இறந்தவருமான சிவச்சந்திரனின் தந்தை தன் மகனைப் பற்றி பெருமையாக, பறிகொடுத்த விரக்தியில் கண்ணீர்மல்கவும் கூறியுள்ளார்.

அதில் என் மகனுக்கு சிறு வயதில் இருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்பது ஆசை. ஏதோ சின்னப்பையன் பேசுறான். பெரியபையனாக மாற்றிக் கொள்வான் என்று தான் நினைத்தேன்.

ஆனால் அவன் பெரியவன் ஆக இராணுவத்தில் சேர வேண்டிய அவனின் லட்சியம் அதிகரித்து கொண்டே சென்றது.

ஒரு முறை அவனின் தாய் இது குறித்து அவனிடம் கேட்ட போது, பெற்ற கடமைக்கு தான் நீ, நாட்டை காப்பாற்றும் கடமைக்கு நான் இருக்கிறேன் என்று கூறினான்.

நாங்க ஒன்னும் அவ்வளவு பெரிய பணக்கார வீடு கிடையாது. எங்கள் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு தான் எரியும். அப்படி அவன் ஒருமுறை விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்த போது, நான் அவனிடம் எண்ணெய் ஊத்தாட்டி திரி கருகிப் போயிரும். அதுமாதிரிதான் நான் எண்ணெய். நீ திரி. நான் உன்னைப் படிக்க வைப்பேன். நீ படிக்கணும் என்று கூறினேன்.

அதுமட்டுமின்றி நீ நல்லா படிச்சு பெரியாளாகி, சின்னையா மவன் யாருன்னு யாரும் கேட்கக் கூடாது. சிவச்சந்திரன் அப்பன் யாருன்னுதான் கேட்கணும் என்று கூறினேன்.

அன்று நான் சொன்னது போலவே இன்று இங்கு வருபவர்கள் எல்லாம் சிவச்சந்திரன் அப்பா யாருன்னுதான் கேக்குறாங்க. நான் சொன்னதை 20 வருஷத்துக்கு அப்புறம் நிறைவேத்திட்டான் என் மகன்.

அவன் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது கூட, எங்களிடம் அதிகமாக காசு கேட்கமாட்டேன். மூட்டை தூக்கி தான் படிச்சான், அப்போ கூட அவன் நான் நாட்டுக்காகச் சாகவும் தயாரா இருக்கேன்.

அதைத் தவிர வேறு எந்த லட்சியமும் இல்லை. நான் இங்கு விடுமுறையில் இருக்கும்போது ஏதாவது நடந்தால் என்னால பார்க்க முடியும். மத்தப்படி நான் செத்தாதான் இங்கே வருவேன் என்று கூறினான்.

இரண்டு வருடத்திற்கு முன்பு தம்பி இறந்தப்ப கூட அவன் வரவில்லை, அந்தளவுக்கு தன் வேலையில் வைராக்கியமா இருந்தான். இப்போதான் லீவு முடிஞ்சு போனான். அவன் சொன்ன மாதிரியே செத்துப்போய்தான் வந்திருக்கிறான். எங்களோட ரெண்டு பிள்ளையையும் பறிகொடுத்துட்டோம். இப்போ எங்களுக்குக் கொள்ளி வைக்கக் கூட வாரிசு இல்லை என்று கண்கலங்கி கூறியுள்ளார்.

இறந்த சிவச்சந்திரனின் மனைவி நர்சிங் முடித்துள்ளார். அவருக்கு சிவமுனியன் என்ற குழந்தையும் உள்ளது. சிவச்சந்திரன் இறந்துவிட்டதால், அவர் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers