தமிழர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சிக்கியது எப்படி? வெளியான முழுத்தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்- இ- முகமது இயக்க அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை, இராணுவத்தினர் தேடி பிடித்து வேட்டையாடி வருகின்றனர்.

அதில் முதலில் இந்த தாக்குதல் நடத்தியது 10 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையின் பயனாக பயங்கரவாதிகள் சிலர், பீங்லான் கிராமத்துக்குள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வேட்டையாடினார்கள். ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளில் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இறந்தவர்கள் யார் என்பது முதலில் உறுதிபடுத்தப்படாமல் இருந்த நிலையில், அதன் பின்

கம்ரன் மற்றும் ஹிலால் என்று தகவல்கள் வெளியானது. இதில் கம்ரன் என்பவன்தான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.

இவன் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். அங்கு ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிர் பறிபோக காரணமாக இருந்த கொடூரன்.

பாகிஸ்தானில் ஜெய்ஷ்- இ- முகமது இயக்கத்தை ஆரம்பித்த மசூத் அசாருக்கு இவனைப் பற்றி தெரிய வர, அசாரின் அழைப்பின் பேரில் கம்ரன் பாகிஸ்தானுக்கு வந்து வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்து வந்தான்.

இவனை பயன்படுத்தி மசூத் அசார் காஷ்மீரில் பல தடவை கைவரிசை காட்டி உள்ளான். அதன் பின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க முதன்மை கமாண்டர்களில் ஒருவனாக கம்ரன் உயர்ந்தான். இதைத் தொடர்ந்து மசூத்அசாரின் வலதுகரம் போல இயங்கி வந்தான்.

மசூத் அசாரின் உறவினர் உஸ்மான் என்பவன் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டான். அதற்கு பழிவாங்கும் வகையிலேயே ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த கம்ரனை கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் திகதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பூஞ்ச் செக்டார் வழியாக காஷ்மீருக்குள் மசூத் அசார் அனுப்பி இருந்தான்.

கம்ரனுக்கு அப்துல் ரசீத் காஜி என்ற பெயரும் உண்டு. ஆப்கானிஸ்தான் போரில் கலந்து கொண்ட இவன், வெடிகுண்டுகளை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவன். எனவேதான், அவனை மசூத் அசார் இந்த தாக்குதலுக்காக தேர்வு செய்து அனுப்பியுள்ளான்.

அவன் ஊடுருவிய தகவல் பாதுகாப்புபடையினருக்கு ஏற்கனவே தெரியவந்தது. அவனை தேடிய போது எங்கும் கிடைக்காத காரணத்தினால் ரகசியமாக பதுங்கி இருந்து தாக்குதலுக்கான திட்டங்களை அவன் தயாரித்து இருக்கிறான்.

கடந்த வியாழக்கிழமை புல்வாமாவில் தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாளுக்கு முன்பு இவனை பாதுகாப்பு படையினர் நெருங்கினார்கள். அவனை சுற்றிவளைத்து கொல்லும் முயற்சி நடந்தது.

ஆனால் அதற்குள் அவன் தப்பி சென்று விட்டான். மறுநாள் அவன் புல்வாமாவில் தாக்குதல் நடத்தி திட்டமிட்டப்படி தனது கைவரிசையை காட்டியுள்ளான்.

40 வீரர்களை கொன்ற பிறகு அவன் பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசாருக்கு தகவல் அனுப்பி இருந்தான். உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாத நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவன் தகவல் பரிமாற்றம் செய்துள்ளான்.

அவன் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் தப்பி சென்று இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் கம்ரன் புல்வாமா மாவட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்பதை பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

சில உளவுத்துறை தகவலின் அடிப்படையில் நேற்று இரவு அவன் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து, இன்று காலை அவன் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers