இந்தியா - பாகிஸ்தான் போர்.... பிரித்தானியாவின் தந்திரம்: ஒரு சிறப்பு பார்வை

Report Print Vijay Amburore in இந்தியா

முன்னுரை:

காஷ்மீர் என்பது இன்றளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் பரபரப்பான ஒரு இடமாகவே கருதப்பட்டு வருகிறது.

இயற்கை வளம் கொழிக்கும் அழகினால் அனைவரின் கவனத்தையும் பெற்று வந்த பள்ளத்தாக்கில், தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களால் ரத்த வெள்ளமாக காட்சியளிக்கிறது.

இதனை கைப்பற்ற இரு நாடுகளும் 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் போர் புரிந்துள்ளன. ஆனால் அந்த சமயங்களில் ஐநா மன்றம் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படாமல் பல உயிர்கள் போய்க்கொண்டிருப்பதும் தொடர்ந்த வண்ணமாகவே இருந்து வருகிறது.

காஷ்மீர் பற்றிய வரலாறு:

1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்கிற கட்சியானது, காஷ்மீர் தனி நாடாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. கட்சியில் தலைவர்ஷேக் அப்துல்லா இதில் தீவிரமாக இருந்து வந்தார்.

காஷ்மீரில் முஸ்லிம் மக்கள் அதிகம் என்பதால் மத உணர்வை தூண்டி மக்களிடம் செல்வாக்கு தேடிய இந்த கட்சி அதன் பின்னர், மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் இருந்து 1947 ஆகஸ்ட் 15-இல் சுதந்திரம் வாங்கிய பின்னர், இந்தியா- பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.

அப்போது பிரித்தானியா ஒரு சூழ்ச்சி நிறைந்த தந்திரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்து கொள்வார்கள் என கூறியது.

அதன்படி, இருநாடுகள் பிரிந்தாலும் காஷ்மீர் யாருடனும் சேரப்போவதில்லை. தனிநாடாக இருக்க போகிறது என்கிற உறுதியான அறிவிப்பினை காஷ்மீர் மாநிலத்தை ஆண்ட மன்னர் ஹரிசிங் வெளியிட்டார். இந்து மன்னராகிய ஹரிசிங் டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள செல்வாக்கு மிகுந்த மனிதர்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக 1947-ல் அக்டோபர் 22-ம் திகதி முதன்முறையாக பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து கைப்பற்றும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தன. சிறிய படைபலத்தை மட்டுமே கொண்டிருந்த காஷ்மீரால், இதனை எதிர்க்க முடியவில்லை. வேகமாக முன்னேறிய பாகிஸ்தான் படைகள் காஷ்மீரைச் சூறையாடி, தலைநகர் ஸ்ரீநகரை தன்வசப்படுத்தியது.

இதனையடுத்து மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினர். அதன்படி 'இடைக்கால(தற்காலிக) இணைப்பு' என்னும் ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1947 அக்டோபர் 26-இல் ஷேக் அப்துல்லா ஒப்புக்கொண்டபின் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். உடனடியாக செயல்பட்ட இந்திய படைகள், பாகிஸ்தானை பின்னோக்கி விரட்டி ஸ்ரீநகரை முழுவதும் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது.

இடைக்காலமாக இணைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்றினையும் இந்தியா கவனித்து கொண்டிருந்தது.

மேலும் அந்த ஒப்பந்தத்தில் மவுண்ட் பேட்டனின் ஆலோசனைப்படி ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது. அது என்னவெனில், “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதாகும்.

இந்த சமயத்தில் ஐநாவின் உதவியை இந்தியா நாடியதால் பேச்சு வார்த்தையின் மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

“காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதனை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இன்றுவரை அதற்கான வாக்கெடுப்பினை நடத்தாமல் இரு நாடுகளும் பங்கு போடுவதில் குறியாக இருந்து வருகின்றன.

இதற்கிடையில் சிக்கிக்கொண்டு காஷ்மீர் மக்கள் தினம்தோறும் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையினை வெறுத்தே ஒரு கட்டத்தில் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதாகவும் ஒரு கூற்று இருந்து வருகிறது.

முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்:

  • அக்டோபர் 27, 1947 - காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது.
  • ஜனவரி 1948 - இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது. போரின் முடிவில் லைன் ஆப் கண்ட்ரோல் எற்படுத்தப்பட்டது.
  • ஆகஸ்ட் 5, 1965 - காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் லைன் ஆப் கண்ட்ரோலை எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன.
  • ஜனவரி 10, 1966: சோவியத் யூனியன் ஏற்பாடுசெய்த அமைதி முயற்சியில் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தனது. அப்போது நிலவிவந்த போர் சூழலை முடித்து வைக்க சோவியத் யூனியனின் பிரதமர் கோசிஜின், முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மற்றும் இந்தியப் பிரதமர் வாஜ்பாயி இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
  • ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முந்தைய முக்கிய தாக்குதல்கள்:

  • 1999 நவம்பர் 3: ஸ்ரீநகர் பதாமி பாஹ் பகுதியில் ராணுவத்தினர் மீதான தற்கொலைப்படை தாக்குதலில் 10 வீரர்கள் பலி.
  • 2002 மே 14: கலுஷாக் ராணுவ கன்டோன்மென்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் பலி. இதில் பெரும்பாலானவர்கள் வீரர்களின் குடும்பத்தினர்.
  • 2016 செப்டம்பர் 18: உரி பகுதியில் ராணுவ முகாம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலில் 19 வீரர்கள் பலி.
  • 2019 பிப்ரவரி 14: புல்வாமா பகுதியில் ராணுவ வாகனம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் பலி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்