மைனஸ் 7 டிகிரி பனியில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட ராணுவத்தினர்! பின்னர் நடந்த அதிசயம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் காஷ்மீரில் போக்குவரத்து வசதி இல்லாமல் பனியில் சிக்கித் தவித்த கர்ப்பிணியை மீட்ட ராணுவ வீரர்கள், அவரை மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பல இடங்களில் கட்டி கட்டியாக கொட்டும் பனியால் போக்குவரத்து தடைபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாண்டிபூரில் உள்ள ராணுவ முகாமுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தனது மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும், மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல உதவ வேண்டும் என்றும் உதவி கோரியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல், போனில் பேசிய நபரின் வீட்டுக்கே சென்ற ராணுவத்தினர் அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குறித்த கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள், இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே அப்பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது குறித்து ராணுவ அதிகாரி கூறுகையில், ‘தொலைபேசி அழைப்பு வந்தபோது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. அப்போது மைனஸ் 7 டிகிரி. பனியால் சாலைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்தது.

சாலைப்பயணம் என்பதே முடியாத காரியமாக இருந்தது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. அந்த பெண்ணுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். மிகவும் சிரமப்பட்டு அந்த பெண் இருக்கும் கிராமத்துக்கு சென்றோம்.

எங்களுக்கு நேரம் குறைவாக இருந்ததால், அவரை ஸ்ரெக்ச்சரில் வைத்து இரண்டரை கிலோ மீற்றருக்கு மேலாக கைகளிலேயே தூக்கி வந்து ராணுவ ஆம்புலன்சில் ஏற்றினோம். பின்னர் அவரை பாண்டிபூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்’ என தெரிவித்தார்.

இந்நிலையில் குழந்தைகளும், தாயும் நலமாக இருப்பதாகவும் சரியான நேரத்தில் உதவிய இந்திய ராணுவத்திற்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers