பணியின்போது மொபைல் போன் பயன்படுத்த பொலிசாருக்கு தடை: நீதிமன்றம் அதிரடி

Report Print Balamanuvelan in இந்தியா

பணியிலிருக்கும் பொலிசார் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை பொலிஸ் கமிஷனருக்கு அறிவுறுத்தியதையடுத்து, பணியிடத்தில் செல்ஃபோன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று தனது இருக்கையில் அமர்ந்ததும் முதல் வேலையாக இந்த விடயத்தைக் கையில் எடுத்த நீதிபதி N.ஆனந்த், இனி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொலிசார் யாரும் பணியிலிருக்கும்போது மொபைல் போன் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்யுமாறு அரசு வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார்.

தான் நீதிமன்றத்திற்கு வரும் வழியில், போக்குவரத்து சிக்னல் ஒன்றில், ஒரு பெண் கார் விபத்து ஒன்றில் சிக்க நேரிட்ட சமயத்தில், அங்கு பணியிலிருந்த போக்குவரத்து பொலிசார் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிவித்தார் அவர்.

இது மட்டுமேயல்லாமல் அடிக்கடி இது போன்ற காட்சிகளை தான் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார் நீதிபதி.

சில பொலிசார் தங்கள் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அல்லது, தங்கள் வேலையை உண்மையாக செய்யாமல் மொபைல் ஆப்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், அவர்களது வேலை உயிர்களுடன் தொடர்புடையது ஆகையால், அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், நீதிபதிகள் வழக்குகளின்போது போனில் பேசிக்கொண்டிருந்தால் ஒப்புக்கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர் சில குறிப்பிட்ட பணிகளை செய்வோர் பணி நேரத்தின்போது பயன்படுத்தவே கூடாது என்றார்.

இதைத் தொடர்ந்து பணியிடத்தில் மொபைல் போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல காவலர்கள் பணியின் போது தேவையின்றியும் அளவுக்கு அதிகமாகவும் மொபைல் போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ள டி.ஜி.பி. இதனால் பணியில் தகவலை பெறுதல், சிந்தனை, கவனம்,செயல்வேகம், உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்து ஒழுங்கின் போது மொபைல் போன்களை பயன்படுத்துவதால், விதி மீறல்களை கவனிக்க முடியாமலும், தவறு செய்பவர்களை பிடிக்க முடியாமலும் போவதாகவும் கூறியுள்ளார் அவர்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, போராட்டங்கள், பண்டிகைகள்,ரோந்து, விசாரணை, போக்குவரத்து ஒழுங்கு உள்ளிட்ட பணிகளின் போது, உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள பொலிசார் மொபைல் போன்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்