விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான சொகுசு படகு: வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

பல ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்காக கேரளாவில் தயாரான இரும்பினாலான படகு ஒன்று சேதமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் முனம்பம் பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்திலேயே இந்த மினி கப்பல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கேரளாவின் முனம்பம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்காக கப்பல் தயாரிப்பதாக தமிழகத்தின் கியூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிட்டியுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே குறித்த கப்பலானது முனம்பம் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் திருச்சியில் இருந்து கியூ பிரிவு பொலிசார் முனம்பம் பகுதிக்கு சென்று குறித்த கப்பலை மீட்ட நிலையிலேயே அந்த கப்பலானது விடுதலைப்புலிகளுக்காக தயாராவது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக முனம்பம் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டு துருப்பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல முறை கியூ பிரிவு பொலிசாரை அணுகியும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் கேரள மீன்வளத்துறை அமைச்சகத்தை நாட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முனம்பத்தில் இருந்து சமீபத்தில் தமிழர்கள் உள்ளிட்ட பலர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்றதாக வெளியான தகவலை அடுத்தே விடுதலைப்புலிகளின் கப்பல் தொடர்பில் தகவல் வெளியானது.

குறித்த கப்பலானது 65 அடி உயரமும் 72 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. கப்பலை தயாரிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் முன்பணமாக தரப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

அந்த கப்பலை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers