தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஒரே கல்லில் அமைந்த பிரம்மாண்டமான மகாவிஷ்ணு சிலை ஒன்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்த சிலையானது, வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டையில் உள்ள மலையை செதுக்கி 64 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட இந்த சிலையை நகர்த்தி கொண்டு செல்ல, 240 டயர்கள் கொண்ட ராட்சத லொறி பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இந்த லொறி திருவண்ணாமலையை தாண்டி செங்கம் வருவதற்குள் ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இதற்கு காரணம் இந்த சிலையின் எடை மற்றும் நீளம், அகலம் தான். மேலும், பல இடங்களில் லொறியின் டயர்கள் பஞ்சராகி விடுகின்றன.
நேற்றைய தினம் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்திற்கு சிலை வந்தது. அப்போது லொறியில் உள்ள 240 டயர்களில் 15 டயர்கள் அடுத்தடுத்து வெடித்தன. ஒரே நேரத்தில் 15 டயர்களும் பஞ்சர் ஆனதால் மாற்று டயர்கள் கைவசம் இல்லை. அவை அகமதாபாத்தில் இருந்து கொண்டுவரப்பட வேண்டும்.
இதனால் செங்கத்திலேயே லொறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாபாளையம்-செங்கம் இடையே 18 கிலோ மீற்றருக்கு மண் சாலைகள் உள்ளதால் லொறி செல்வதில் சிக்கல் அதிகம் என்று கூறப்படுகிறது.