தமிழகத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜூனன் உட்பட 7 பேர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணமடைந்தது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

ஆனால், சி.பி.ஐ இதுவரை காவல்துறையினர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்யாதது உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதி சி.பி.ஐ இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியும், காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், இதனால் சி.பி.ஐ இணை இயக்குனர் பிரவீன் சின்ஹா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சி.பி.ஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

மேலும், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உட்பட குறிப்பிட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பெயர் சி.பி.ஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என வாதிட்டார்.

அத்துடன் அந்த இடங்களில் அடையாளம் தெரியாதவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers