சென்னையில் 100 நாட்கள் கழித்து காணாமல் போன ஹரிணி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் காளியம்மாள் - வெங்கடேஷன் தம்பதியினர்.
இந்நிலையில், 100 நாட்கள் குழந்தையை வளர்த்து வந்த சங்கீதா, தான் குழந்தையை நன்றாக வளர்த்து வந்ததாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, திருமணமான எனக்கு குழந்தை பிறக்கவில்லை, சோதனையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றார்கள்.
இதனால் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தோம்.
என்னோட குடும்ப நண்பர்களான பிரகாஷ், வீரபாண்டி இவங்க எனக்கு ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடுப்பதாக சொன்னார்கள்.
குழந்தையை வளர்க்க முடியாமல் நரிக்குறவர் கஷ்டப்படுவாங்க. அவங்க குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம். கொஞ்சம் பணம் கொடுத்தா அவங்க குழந்தையை கொடுப்பாங்கன்னு சொன்னாங்க.
கொஞ்சநாள் கழிச்சு ஹரிணியை கொண்டுவந்து கொடுத்தாங்க. நானும் அவங்களுக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தேன்.
ஹரிணி வீட்டுக்கு வந்த நாள் முதல் என்னை அம்மா என்று பாசமாக அழைத்தாள். அவளை எனது சொந்த மகள் போல பார்த்துக்கொண்டேன்.
காது குத்தி, கொலுசு எல்லாம் போட்டுவிட்டேன். என்னுடன் நன்றாக விளையாடுவாள். கொஞ்ச நேரம் கூட என்னைப் பிரிந்து இருக்க மாட்டாள்.
ரெண்டு மாசம் கழிச்சுதான் அது கடத்தப்பட்ட ஹரிணின்னு எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும் குழந்தையை கொடுக்க மனசு இல்லை. இதனால் எனது கணவருக்கும் எனக்கும் பிரச்சனை வந்தது.
இந்நிலையில்தான் பொலிசில் இருந்து ஹரிணியை அழைச்சிக்கிட்டு போனாங்க. அப்பவும் என்னைப் பார்த்து அம்மான்னு தான் அழத் தொடங்கினாள் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் வளர்த்த தாய் சங்கீதா.