பிரபல நடிகர்களின் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை.. கோடிகளில் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

Report Print Kabilan in இந்தியா

கன்னட நடிகர்கள் உட்பட 8 பேரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையில், ரூ.109 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், சுதீப், யஷ் மற்றும் தயாரிப்பாளர்கள் ராக்லைன் வெங்கடேஷ், விஜய் கிரகந்தூர், ஜெயண்ணா, சி.ஆர்.மனோகர் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில், நடிகர் சிவராஜ்குமாரின் வீட்டில் இருந்து 2 பைகளில் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். மேலும் நடிகர் யஷ் வீட்டில் 30 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த சோதனைகளில் மொத்தமாக ரூ.109 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமாகியுள்ளது. அத்துடன் ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 180 பேர் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் கடந்த 3ஆம் திகதி சோதனை நடத்தினர்.

திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்ததில் வருமானத்தை மறைத்தது, திரைப்படத்திற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டது, திரையரங்குகளில் வசூலான பணம், நடிகர்கள் பெற்ற சம்பளம் ஆகியவற்றை கணக்கில் காட்டாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி ஏய்ப்பு குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers