அழகில் மயங்கிய இளைஞர்கள்... ஒரே பெண்ணுடன் 3 பேருக்கு திருமணம்: அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 3 இளைஞர்களுக்கு ஒரே பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து வைத்து, பண மோசடியில் ஈடுபட்ட திருமண புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமணத்துக்கு பெண் தேடி வந்துள்ளார்.

இதையறிந்த புரோக்கர் கண்ணன் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரில் தனக்கு தெரிந்த ரம்யா என்ற ஒரு பெண் இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறி சக்திவேலிடம் அந்த பெண்ணின் போட்டாவை காட்டி உள்ளார்.

அந்த பெண்ணின் அழகில் மயங்கிய சக்திவேல் உடனடியாக நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு செய்ய கேட்டுள்ளார்.

அதன் படி 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு 1 பவுனில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது சக்திவேலிடம் இருந்து கமிஷனாக 25 ஆயிரம் ரூபாயை பெற்று சென்ற புரோக்கர் கண்ணன் அத்தோடு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த தேதியில் திருமணமும் நடக்காததால் அந்த பெண்ணின் சொந்த ஊருக்கு தேடிச்சென்ற போது அப்படி ஒரு பெண் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் புரோக்கர் கண்ணன் அதே பெண்ணின் புகைப்படத்தை காட்டி பெயர் காவ்யா என்று கூறி ஆத்துர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விஸ்வநாதன், விவசாயி பாலமுருகன் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்து ஆளுக்கு ஒரு பவுன் மோதிரத்தையும், கமிஷனாக தலா 25 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றியது வெளிச்சத்துக்கு வந்தது.

அழகான பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தும், திருமணம் ஆகாத சோகத்தில், பணத்தையும் இழந்து தவித்த அந்த முதிர் காளையர்கள் மூவரும் புரோக்கர் கண்ணனை தேடி வந்தனர்

இந்த நிலையில் ஆத்தூர் அடுத்த கள்ளகுறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கேரள பதிவெண் கொண்ட காரில் வேறொரு ஒரு பெண்ணுடன் புரோக்கர் கண்ணன் சுற்றுவதை அறிந்து அங்கு சென்ற மூவரும் புரோக்கர் கண்ணனை காருடன் மடக்கி பிடித்தனர். கண்ணன் மாற்று திறனாளியாக இருந்தாலும் ஏமாற்றி சென்ற ஆத்திரத்தில் அவருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவருடன் காரில் வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து தருவதாக கூறி கள்ளகுறிச்சி பகுதியில் ஒரு இளைஞரிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் கண்ணன் இதுவரை எத்தனை பேரிடம் இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று விரிவாக விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கேரளாவை சேர்ந்த புரோக்கர் ஹரி மற்றும் மூன்று பவுன் மோதிரங்களுடன் தலைமறைவான அந்த பெண்ணையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்