சொந்த மகனிடம் சொத்துக்களை இழந்தேன்... வாடகை வீட்டில் அல்லல் படும் பெரும் கோடீஸ்வரர்

Report Print Arbin Arbin in இந்தியா

மகனின் உணர்வுபூர்வமான மிரட்டலால் மொட்த சொத்துகளையும் மகனுக்குக் கைமாற்றி ஏமாந்துவிட்டேன் என்று ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜய்பட் சிங்கானியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கிய விஜய்பட், வாடகை வீட்டுக்கு குடியேறியதோடில்லாமல் அந்த வாடகையையும் தர முடியாமல் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ரேமண்ட்ஸ் நிறுவனம், தனது நூறாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அந்த நிறுவனத்தின் குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பகைமை காரணமாக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக தனது 78 வது வயதில் தமது வசம் இருந்த 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது நிறுவனப் பங்குகள் அனைத்தையும் தனது ஒரே மகன் கெளதம் ஹரி சிங்கானியா வசம் ஒப்படைத்தார் விஜய்பட் சிங்கானியா.

தற்போது 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை கெளதம் ஹரி நிர்வகித்துவருகிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடைப்பட்ட பிரச்னையில் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான ஜே.கே.ஹவுஸ் என்ற 36 மாடிக் கட்டிடமும் முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

இதனிடையே குடும்பப் பகை காரணமாக குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விஜய்பட் சிங்கானியா வெளியேற்றப்பட்டார்.

தற்போது அவர், 7 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்துவருகிறார். மட்டுமின்றி வாடகையையும் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தனது மகன் மீதே வழக்குத் தொடுத்த விஜய்பட், தனது வீட்டுக்கான வாடகையை ரேமண்ட்ஸ் நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும், ஜே.கே.ஹவுஸில் தனக்கும் உரிய உரிமை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தன் மகனிடம் இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைத்தது தனது முட்டாள்தனத்தின் உச்சம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்