சேலம் மாவட்டத்தில் அரசின் நிதியுதவியால் கிடைத்த ஒரு பவுன் தங்கத்தை தன்னிடம் கொடுக்காமல் தனது தாய் வீட்டில் கொடுத்த காரணத்தால் கர்ப்பிணி மனைவியை கொலை செய்தேன் என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகள் புவனேஸ்வரி (21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகன் ராஜவேல் (22) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
புவனேஸ்வரி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி வயிற்று விலி காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துவிட்டார் என ராஜவேல் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சந்தேகமடைந்த புவனேஷ்வரியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து நடத்தப்பட் விசாரணையில் புவனேஸ்வரி கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக கணவர் ராஜவேல் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்,
திருமணத்தின்போது, தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் புவனேஸ்வரி விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதியன்று, மாவட்ட சமூகநலத்துறை மூலமாக புவனேஸ்வரிக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்பட்டது.
மனைவிக்கு கிடைக்கும் தங்கத்தை விற்று, புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவள் தங்கத்தை தனது தாய் வீட்டில் கொடுத்துவிட்டாள். அதை திருப்பி வாங்கி வர முடியாது என்று கூறிவிட்டாள்.
இதனால் எனக்கும் அவளுக்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று, அவளுடைய கழுத்தை கயிறால் நெரித்து துடிதுடிக்க கொலை செய்தேன். பிறகு ஒன்றும் தெரியாததுபோல் வயிற்று வலியால் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தில் கூறினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது ராஜவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.