எனக்கு வாழ பிடிக்கவில்லை! தற்கொலைக்கு முயன்ற எச்.ஐ.வி ரத்ததானம் கொடுத்த இளைஞரால் பரபரப்பு

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், ரத்த தானம் செய்த இளைஞர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநரின் கர்ப்பிணி மனைவிக்கு, அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தம், கடந்த 2016ஆம் ஆண்டு கமுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உறவினர் பெண் ஒருவருக்காக தானமாக அளித்தது என்று தெரிய வந்தது. ஆனால், வெளிநாடு செல்ல முயற்சித்த குறித்த இளைஞர் மதுரை தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, சிவகாசி ரத்த வங்கிக்கு சென்று தன்னிடம் பெறப்பட்ட ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று அவர் கோரினார்.

ஆனால், அதற்குள் அந்த ரத்த கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனால் அப்பெண் எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். தானமாக பெறப்பட்ட ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இளைஞரிடம் மருத்துவர்கள், பொலிசார் விசாரித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இளைஞரை சந்தித்து பலரும் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மனமுடைந்த அவர், நான் வாழ விரும்பவில்லை எனக் கூறினார். மேலும் சாகப் போகிறேன் என்று கூறி, தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார்.

இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த இளைஞரை பிடித்து வந்து மீண்டும் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

அத்துடன் அவர் மீண்டும் தற்கொலைக்கு முயல்வார் என்பதால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers