கர்ப்பிணி உடலில் ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம்: பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா
239Shares

தமிழகத்தில் கர்ப்பிணி பெண் உடலில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார்.

இவர் சாத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.

2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

பின்னர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண் அதே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது.

கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் ரத்த வங்கி ஊழியர் வளர்மதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்