உயிருக்கு போராடிய ஓட்டுனர்..காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த மக்கள்: வேதனையுடன் கூறிய சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தீப்பிடித்து எரிந்த காரின் உள்ளே இருந்த டிரைவர் பத்து நிமிடத்திற்கும் மேலாக காரின் கதவை தட்டிய போதும், அங்கிருந்த மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமானநிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் மேம்பாலத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அந்த வழியே சென்ற பலரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் கார் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.

அந்த காரின் ஓட்டுனர் விண்ட்ஷீல்ட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது விமானநிலையம் அருகே வந்த போது, காரின் இன்ஜின் இருக்கும் பகுதியிலிருந்து கரும்புகை வெளிவந்துள்ளது.

இதைக் கண்ட ஓட்டுனர், விரைவாக காரை நிறுத்திவிட்டு இறங்குவதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரியத் துவங்கியது.

கார் கதவுகளின் லாக், ஆட்டோமேட்டிக்காக என்கேஜ் ஆகிக்கொண்டதால் காருக்குள் மாட்டிக்கொண்ட ஓட்டுனர், பின்பக்கக் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து வெளியேறி, கடும் போராட்டத்துக்குப் பிறகே உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் காரிலிருந்து தப்பிய ஓட்டுனர் கூறுகையில், பத்து நிமிடத்துக்கும் மேல தீப்பிடித்து எரியும் காருக்குள் மாட்டிக் கொண்டேன்.

சுற்றி ஐம்பது பேருக்கும் மேல நான் கதவ தட்டினதை வேடிக்கை தான் பார்த்தார்களே தவிர, உதவ முன்வரவில்லை, கார் கதவை உடைத்தாவது காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம் ஆனால் வரவில்லை. காரின் மதிப்பு 16 லட்சம் ரூபாய் எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers