கண்ணீருடன் ஒரு தோட்டத்தையே அழித்த விவசாயி!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கத்திரிக்காய் விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்து ஒட்டுமொத்த தோட்டத்தையும் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அகமதுநகர் மாவட்டம் சக்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பவாக்கே. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காய் பயிரிட்டிருந்தார்.

இதற்காக சொட்டுநீர் பாசனம் அமைத்தல், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் என 2 லட்சம் வரை செலவு செய்துள்ளார் பவக்கே. இந்நிலையில், சந்தைக்கு தான் அறுவடை செய்த கத்திரிக்காயை கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு கத்திரிக்காய் ஒரு கிலோ வெறும் 20 பைசாவிற்கு மட்டுமே விலைபோயுள்ளது. இதனால் அவருக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே கிடைத்ததால் மிகுந்த வேதனையடைந்துள்ளார்.

இந்நிலையில் தனது தோட்டத்திற்கு சென்ற ராஜேந்திர பவக்கே, இன்னும் கத்திரிக்காய் இருந்தால் மேலும் இழப்பு ஏற்படும் எனக் கருதி, விரக்தியில் அங்கிருந்த கத்திரிக்காய் செடிகளை வேரோடு பிடுங்கி தோட்டத்தை அழித்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கிய விதத்தில் ரூ.35 ஆயிரம் கடனை இன்னும் அடைக்கவில்லை. எப்படி எனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டப் போகிறேன் எனத் தெரியவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனதில் விரக்தி ஏற்பட்டு கத்தரிச்செடிகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்து, தோட்டத்தை அழித்துவிட்டேன்.

ஒவ்வொரு வாரமும் கத்திரிக்காயை விலைக்குக் கொண்டு சென்றாலும், முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. இனிமேலும் விவசாயம் செய்ய முடியாது என்பதால் தோட்டத்தை அழிக்க முடிவு செய்தேன்.

வீட்டில் ஆடு, மாடுகள் இருக்கின்றன. அவற்றை கவனிக்கப் போகிறேன். கத்திரிக்காய் விவசாயம் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தேன். என் கால்நடைகளையும் எப்படி காப்பாற்றுவது என தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers