தன்னுடைய பாடல்களை பாடுவதற்கு ராயல்டி கோரியுள்ள இளையராஜா, வெளிநாட்டில் சென்று தனது பாடல்களை பாடும் பாடகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்துள்ளார்.
இதனால், இளையராஜாவுக்கு பணத்தாசை பிடித்துவிட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து இசைமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார்.
இந்த விஷயத்தில் இளையராஜா சாரிடம் எந்தத் தவறும் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இந்த ராயல்டி விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அதை ஐஆர்பிஎஸ் மாதிரியானவர்களிடம் கொடுத்துவிட்டால், பிரச்சினை இல்லை.
இளையராஜா அவர்களும், முன்பு ஐஆர்பிஎஸ்ஸிடம் ராயல்டியை வாங்கித் தரும் பொறுப்பைக் கொடுத்திருந்தார். அதுவரை இளையராஜா பணம் கேட்கிறார் என்று மக்கள் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆனால் இப்போது அந்தப் பேட்டியிலேயே இளையராஜா சார், ஐஆர்பிஎஸ்சிடம் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது அவரே நேரடியாகப் பேசுவதால், அவர் பணத்தாசை பிடித்தவர், பணம் பணம் என்று கேட்கிறார் என்று சிலருக்குத் தோன்றுகிறது. இது ஒவ்வொரு படைப்பாளியின் உரிமை. இதில் தவறேதுமில்லையே.
இளையராஜாவே, அவரின் குரலில் சொல்லும்போது, அவரை விமர்சிக்கும் அளவுக்கு விஷயம் போய்விடுகிறது. ராயல்டி, பணம் வசூலிப்பது, பெறுவது, தருவது என்கிற நுணுக்கங்களெல்லாம் மக்களுக்குத் தெரியாதுதானே. அதனால் இளையராஜாவை தவறாக நினைக்கிறார்கள்.
இப்போது, தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், எனக்கான ராயல்டியை பெற்றுத்தரும் என்று சங்கத்திடம் ஒப்பந்தமிட்டிருக்கிறார் இளையராஜா. அதில் ராயல்டியில் 80 சதவிகிதம் இளையராஜாவுக்கு, 20 சதவிகிதம், சங்கத்தின் நிதிக்காக என்று அவரே எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்.
இதுவே மிகப்பெரிய விஷயம். இன்றைக்கும் இரவில் நல்ல இசை கேட்கவேண்டும் என்றால் அவரின் இசையைத்தான் நாடுகிறோம். நல்ல இசை, நல்ல பாடல் என்றாலே எண்பதுகளுக்குத்தான் போகவேண்டியிருக்கிறது. அவர் பண்ணிய பாடல்களின் கணக்குப்படி பார்த்தால், சங்கத்துக்கு ஒரு சதவிகிதம் கொடுத்தாலே பெரியவிஷயம். அதுவே அவ்வளவு பெரிய தொகையாக வந்துவிடும்.
மற்றபடி ராயல்டி வாங்கித்தருவதற்கு ரஹ்மான் உள்ளிட்டவர்கள் போல் தனியார் நிறுவனத்தை வைத்துக்கொள்ளாமல், அவரே கேட்டதால்தான் இளையராஜாவுக்கு பணத்தாசை பிடித்துவிட்டது என்று பலரும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.