பெற்றோரை பிச்சையெடுக்க வைத்த பிள்ளைகள்...கலெக்டரிடம் கண்ணீர்விட்டு கதறிய பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டு, தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்ட இரண்டு மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டு கலெக்டர் அவர்களிடம் மீண்டும் ஓப்படைத்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால், வயதான நிலையில் இருவரும் மாதம் ஒரு மகன் வீட்டில் தங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இரண்டு மகன்களுக்கும் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை பாதி பாதியாக பிரித்து கொடுத்துள்ளார்.

பிரித்து கொடுத்த சில நாட்களுக்கு பின்னர், இரண்டு பேர் வீட்டிலும் இங்கே வராதே, அங்கே சென்று சாப்பிடு என்று மாறி மாறி சாப்பாடு போடாமல் தவிக்க விட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அடித்து துன்புறுத்தியுள்ளனர். இருவரும் சாப்பாடுக்கு வழியில்லாமல் தவித்து வந்த போது, அவர்கள் பிச்சையெடுத்தும் சாப்பிட்டு வந்துள்ளனர்.

இறுதியில் கண்ணன் எனக்கு ஒரு 60 செண்ட் இடமாவது கொடுங்கள், நான் அதை வைத்து வாழ்ந்துவிடுகிறேன் என்று கூற, அதற்கும் மகன்கள் மறுத்துள்ளனர்.

மிகுந்த வேதனையில் இருந்த இவர்கள் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமியிடம் இதைப் பற்றி கூறி கதறியுள்ளனர்.

அதன் பின் இரண்டு பேரையும் கலெக்டர் அழைத்து விசாரித்த போது, மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாகவும், 60 சென்ட் நிலத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இளைய மகன் செல்வமோ சொத்துக்களை தரமுடியாது, சாப்பாடு போட முடியாது என்று அடவாடியாக பேசியுள்ளார்.

இதனால் கலெக்டர் இவர்களிடம் இப்படி பேசினால் ஆகாது என்று கருதி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான செட்டில்மென்ட் செய்த பத்திரப்பதிவுவை ரத்து செய்ய அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றி எழுதப்பட்டது.

இதைத் தொடர்ந்து கண்ணனையும் பூங்காவனத்தையும் அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் நேற்று வழங்கினார்.

அதோடு அவர்களிடம், உங்கள் மகன்கள் ஏதாவது பிரச்சினைகள் செய்தால் உடனே என்னை வந்து பாருங்கள் அல்லது போன் செய்யுங்கள் என்று போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.

கலெக்டரின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இதைக் கண்ட இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers