மூன்றாண்டுகளில் மட்டும் எத்தனை ஆணவக்கொலைகள் தெரியுமா? அச்சுறுத்தும் தமிழகம்

Report Print Arbin Arbin in இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் 81 எண்ணிக்கையில் நடந்தேறியுள்ளதாக அச்சுறுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றில் சடலமாக மிதந்த நந்தீஸ் மற்றும் அவரது மனைவி சுவாதி ஆகிய இருவரையும் சுவாதியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களே கொடூரமாக வெட்டி கல்லால் முகங்களை சிதைத்து படுகொலை செய்துள்ள சம்பவமும் இந்த எண்ணிக்கையில் இணைந்துள்ளது.

சாதி ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இதுவரை ஒரு வழக்கு கூட உரிய தீர்வை எட்டவில்லை என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற சாதி ஆணவக்கொலைகளை அரசே மூடி மறைக்கவும் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் நடந்தேறிய 81 ஆணவக்கொலை சம்பவங்களில் பாதிப்புக்குள்ளானது 80 சதவிகிதம் பெண்கள் எனவும் 20 சதவிகிதம் மட்டுமே ஆண்கள் எனவும் ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகின்றது.

மட்டுமின்றி தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலேயே சாதி ஆணவக்கொலைகள் மிக அதிகம் எனவும், கடந்த 2007 முதல் சுமார் 30க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தேசத்தையே உலுக்கிய பிரனாய் ஆணவக்கொலையில் அவரது மாமனார் தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்