பூப்பெய்ததால் தனிக்குடிசையில் இருந்த சிறுமி: கஜா புயலின் கொடூர தாக்குதலால் பலியான சோகம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூப்பெய்ததால் தனியாக தங்க வைக்கப்பட்ட சிறுமி, கஜா புயலுக்கு பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கஜா புயலின் அசுர தாக்குதலால் தமிழகத்தின் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 7ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கஜா புயலுக்கு பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவி, பூப்பெய்ததால் அருகில் இருந்த தென்னந்தோப்பு குடிசையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு தென்னந்தோப்பை கஜா புயல் தாக்கியதில், அங்கிருந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தன. அத்துடன் மாணவி தங்கியிருந்த குடிசையும் அடித்து வீசப்பட்டது. இதனால் குறித்த மாணவி பயத்தில் அலறியதாக தெரிகிறது.

ஆனால், அவரது குரல் யாருக்கும் கேட்கவில்லை. வெளியே வர முடியாமல் தவித்த அந்த மாணவி, தென்னை மரங்கள் விழுந்ததால் குடிசைக்குள்ளேயே சிக்கி மரணமடைந்துள்ளார். மறுநாள் காலையில் மாணவியின் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்த்தபோது தென்னந்தோப்பே சீரழிந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், மரங்களுக்கு நடுவில் சிக்கி கிடந்த மாணவியின் உடலை மீட்டனர். அதனைத் தொடர்ந்து, புயலால் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் தங்கள் தோளிலேயே மாணவியின் உடலை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், நடைபயணமாகவே சொந்த ஊருக்கு கொண்டு வந்து மாணவியின் உடலை அடக்கம் செய்தனர். கிராமமே புயலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டதால், 10 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்