இந்திய சிறுவனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Arbin Arbin in இந்தியா

பிரித்தானியாவின் நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம் நடத்திய புகைப்படப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் நேட்சுரல் ஹிஸ்டரி மியூசியம் வருடா வருடம் காட்டுயிர் புகைப்படப்போட்டி நடத்தி வருகிறது.

10 வயதுக்குட்பட்டோர், 11 முதல் 14 வயதுக்குட்பட்டோர், 15 - 17 வயதுக்குட்பட்டோர் என்ற 3 பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்ட பஞ்சாப்பைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் சிறந்த புகைப்படத்துக்கான பரிசை வென்றுள்ளார்.

அவர் எடுத்த குழாய்க்குள் ஆந்தைகள் அமர்ந்திருக்கும் புகைப்படம் பரிசைத்தட்டிச் சென்றுள்ளது.

பஞ்சாப் சாலையில் தனது தந்தையுடன் காரில் சென்றுகொண்டிருக்கையில் சாலையோரத்தில் இருந்த தண்ணீர் குழாயில் இரண்டு ஆந்தைகள் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார்.

உடனே தனது தந்தையிடம் காரை நிறுத்தச்சொன்ன அர்ஷ்தீப், தனது தந்தையின் கமெரா மூலம் ஆந்தையின் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

பொதுவாக பஞ்சாபில் ஆந்தைகள் அதிகம் என்றாலும் பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட ஆந்தை புகைப்படம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அர்ஷ்தீப் சிங்கின் தந்தை ரந்தீப் சிங்கும் அப்பகுதியில் பிரபலமான புகைப்படக்கலைஞர் எனக் கூறப்படுகிறது.

தன் தந்தையுடன் சேர்ந்து 6 வயது முதல் அர்ஷ்தீப் சிங் புகைப்படம் எடுத்து வருகிறார். அவர் எடுத்த புகைப்படங்கள் பல இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில் நடந்த சிறுவர்களுக்கான ஆசியன் காட்டுயிர் புகைப்படப்போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்