சபரிமலையில் பதற்றம்! ஆன்மீக பூமி கலவர பூமியானது: பொலிசார் நடத்திய தடியடி வெளியான வீடியோ

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமின்றி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பல இடங்களில் தற்போது வரை போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாத வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படவுள்ளது. பெண்கள் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கோவிலுக்கு பெண்கள் செல்லத் துவங்கியுள்ளனர்.

இதற்கிடை கோவிலுக்கு வரும் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை தடுக்கும் வகையில் சபரிமலைக்குச் செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரண முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவிக்கின்றனர். நிலக்கல்லில் சபரிமலைக்கு வரும் பெண்களின் கால்களில் விழுந்து கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த பொலிசார் போராட்டக்காரர்களை கலைப்பது மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பெண்களை அழைத்துசெல்ல காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க சபரிமலை செல்லும் வழிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். தடியடியால் பலர் வனப்பகுதிக்குள் ஓடினர். அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்