சின்மயியின் மீ டூ புகாரில் சிக்கிய நகைச்சுவை நடிகர்! ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு

Report Print Kabilan in இந்தியா
268Shares

தமிழ் நகைச்சுவை நடிகர் டி.எம்.கார்த்திக், #MeToo புகாரில் சிக்கியுள்ளதால் டிவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

#MeToo விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் இதன்மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டி.எம்.கார்த்திக் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு டி.எம்.கார்த்திக் ட்விட்டரில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறுகையில்,

‘சமீப நாட்களாக #MeToo இயக்கத்தின் கீழ், நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. என்னுடனான சந்திப்பின் போது, யாரேனும் அசௌகரியமாக உணர்ந்திருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கோரவே இந்த பதிவை இடுகிறேன்.

எனது தனிப்பட்ட வாழ்விலும், தொழில்ரீதியான தொடர்புகளிலும் நான் எப்போதுமே பெண்களிடம் மரியாதையாகவே நடந்துகொண்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் மனம் ஒத்தே இருந்தனர் என நம்பினேன்.

அதுதான் தவறு. இப்போது நான் உணர்கிறேன். சில நேரங்களில் நான் அத்துமீறியிருக்கலாம். ஆனால், எந்த ஒரு பெண்ணையும் அசௌகரியமாக உணரவைக்க வேண்டும் என நான் திட்டமிட்டதில்லை.

நான் அணுகும் பெண்கள் அசௌரியமாக உணர்ந்தால், அவர்களிடம் இருந்து விலகி விடுவேன். என்னால் யாரேனும் வேதனைப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இதை நான் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அல்லது விளைவுகளை தவிர்க்கவோ தெரிவிக்கவில்லை.

இந்த #MeToo இயக்கம், என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்ள ஒரு உந்துதலாக இருக்கிறது. பல ஆண்டுகளாகப் பல பெண்களுடன் நான் வெற்றிகரமாகப் பணியாற்றியிருக்கிறேன். பெண்ணியத்துக்காகவும் தோள் கொடுத்திருக்கிறேன்.

ஆனால், சில பெண்கள் அசௌகரியத்தை வெளிக்காட்டாமல் என்னை சகித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இப்போது உணர்கிறேன். அதை அன்றே புரிந்திருக்க வேண்டும். எனது தவறுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

இல்லை, வேறு ஏதாவது ஒரு தளத்தில் நான் மன்னிப்பு கோர வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன். எதிர்காலத்தில் என்னை திருத்திக் கொள்ள நான் முற்படுகிறேன்.

#MeToo இயக்கத்துக்கு எனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, இந்த உலகை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்க துணை நிற்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்