கையில் குழந்தையின் சடலத்துடன் லொறியை துரத்தி கொண்டு ஓடிய கர்ப்பிணி தாய்: சோக பின்னணி

Report Print Vijay Amburore in இந்தியா
200Shares

சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியவாறே விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரியை நோக்கி தாய் ஒருவர் விரட்டி செல்லும் சோக சம்பவம் நடந்துள்ளது.

வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் கலைவாணன் (27). இவருடைய மனைவி லட்சுமி (24). இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு மோகித் என்ற மகன் உள்ளார்.

அதோடு லட்சுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். வேர்க்கடலை வியாபாரம் செய்து வரும் கலைவாணன், நேற்று வழக்கம் போல வியாபாரத்திற்கு சென்றிருந்தார்.

கணவருக்கு உணவு கொண்டு செல்வதற்காக லட்சுமி கிளம்பி கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் லொறி ஒன்று, வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த மோகித் மீது மோதிவிட்டு கடந்து சென்றுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி குழந்தையின் சடலத்தை கையில் ஏந்தியவாறே, அலறிக்கொண்டு லொறியை துரத்தி சென்றுள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று லொறியை மடக்கி பிடித்தனர்.

பின்னர் லொறி உரிமையாளரை பொலிஸில் ஒப்படைத்துவிட்டு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மணிகண்டன் (25) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்