அஜித் பட பாணியில் கண்பார்வை தெரியாத மகனை கொலை செய்த தாய்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பார்வையற்ற 13 வயது மகனைப் பராமரிக்க முடியாமல் விரக்தியில் தனது கைகளாலேயே கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆலந்தூர் பட்ரோடு, நஷ்ரத்புரத்தில் வசிப்பவர் பத்மா (34). இவருக்குத் திருமணமாகி பரத் என்கிற மகன் உள்ளார்.

குழந்தை பரத் கண்பார்வை இல்லாமல் பிறந்ததால் மகனுக்குச் சிகிச்சை செய்தும் பார்வை வராத நிலையில் ஏற்பட்ட பிரச்சினையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பத்மாவை விட்டுப் பிரிந்து சென்றார் கணவர்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்த பத்மாவுக்கு பார்வையற்ற மகனைப் பராமரிக்கும் பணியும், குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் பணியும் ஒருசேரத் தலையில் விழுந்தது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் மகன் பரத்தை வளர்க்க வழி தெரியாமலும் தவித்துள்ளார் பத்மா. அடையாரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மகனைப் படிக்க வைத்துள்ளார்.

சில வேளைகளில் மகனுக்கு உணவு கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மகனின் பரிதாப நிலையைப் பார்த்தும் வறுமை நிலையை நினைத்தும் பத்மா விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என பத்மா முடிவு செய்துள்ளார்.

அஜித்தின் ஆசை பட பாணியில் மகனின் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, தனது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் இவரும் தூக்கில் தொங்கியபோது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதனால், தனது மனதை மாற்றிக்கொண்டு மகனையும் காப்பாற்றவிடலாம் என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கே பரிசோதித்த மருத்துவர் பரத் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பத்மாவை பொலிசார் கைது செய்து அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் மாலை புழல் சிறையில் அடைத்தனர்.

தாயை சிறையில் அடைத்த பின்பு மகன் பரத்தின் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்னை எழுந்தது. அதன் பின்னர் போலீசார் அதே பகுதியில் வசித்து வந்த பரத்தின் தந்தை கோபிநாத்தை அழைத்து வந்து பரத்தின் உடலை ஒப்படைத்தனர்.

அவர் பரத்தின் உடலை இறுதி சடங்கு நடத்தி பரங்கிமலை நசரத்புரம் இடுகாட்டில் நேற்று காலை அடக்கம் செய்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்