பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு: வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான மூல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இரண்டாம் இணைப்பு

இந்த வழக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. எனவே விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை சேர்த்து புதிய மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

முதலாம் இணைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் கடந்த 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன், நாராயணன், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் தாக்கல் செய்தனர்.

அதில், 7 பேரை விடுவிப்பது தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த மனுவை 2014-ம் ஆண்டில் விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம், மூலவழக்கின் விசாரணை முடிந்த பிறகு, இந்த மனுவை விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட அனைவரும் வழக்கு தொடரத் தொடங்கினால், வழக்குகள் தேக்கமடையும் எனக் கூறி, விசாரணையை நிலுவையில் வைத்தார்.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான மூல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரிக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers