விருப்பத்தை அடைய முடியவில்லை: மனதை உலுக்கும் மாணவியின் தற்கொலை கடிதம்

Report Print Arbin Arbin in இந்தியா

பெற்றோரின் கனவை கலைக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவிட்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கவுகாத்தியில் செயல்பட்டுவரும் ஐஐடியில் கர்நாடகாவை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் மெக்கானிகல் என்ஜினியரிங் பயின்று வருகிறார்.

கடந்த புதன்கிழமை அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் வழக்கமாக மாணவிகள் அனைவரும் வகுப்புக்கு சென்ற பின், சோதனை செய்வதற்காக வந்த பாதுகாவலர், ஜன்னல் வழியே பார்த்த போதுதான் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் மாணவியின் அறைகளில் சோதனை நடத்திய பொலிசார், தற்கொலை கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், ‘என்னால் எனது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனது உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். எனக்கும் அது பெரிய விஷயமாகவே பட்டது. ஆனால் நான் விரும்பியது பொறியியலை அல்ல. இதை யாரிடம் சொல்வது. எனது பெற்றோரின் கனவு கலைந்து விடாதா? நல்ல ஆசிரியராவதே எனது விருப்பம். பொறியியல் எனக்கு விருப்பமல்ல’ என எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து பேசிய கல்வி நிறுவன செய்தித் தொடர்பாளர் “உயிரிழந்த அன்று காலை மாணவி தனது அறை தோழியிடம் பேசியிருக்கிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை, வகுப்புக்கு வர இயலாது எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உயிரை மாய்த்துக் கொள்வார் என யாரும் நினைக்கவில்லை” என்றார்.

தனது விருப்பத்தை அடைய முடியவில்லை என்ற ஏக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளை அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என பெற்றோர் கேட்க வேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers