மனைவியை கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்த கணவன்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம் நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன்(30). இவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்மு(26). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார்.

தனது பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடெடுத்து மனைவி, மகனுடன் சீனிவாசன் வசித்து வந்தார். சீனிவாசனுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த சந்தேகம் தீவிரமானதால் கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தகராறு ஏற்பட்டால் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் சீனிவாசன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அம்முவை பலமாக தாக்கிய சீனிவாசன் பின் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தனது உடைகளை மாற்றிக் கொண்ட சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை தூக்கிக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்தவற்றை கூறிய சீனிவாசன், மகனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவசர உதவி பொலிசை தொலைபேசியில் அழைத்துள்ளார். தனது வீட்டின் முகவரியை கூறி, கணவன்-மனைவி இரவு முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், மிகவும் சத்தமாக இருப்பதால் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் சீனிவாசன். இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பதற்றத்துடன் இருந்த சீனிவாசனின் பெற்றோரிடம் நடந்த விடயங்களை கேட்டுள்ளனர்.

அவர்களும் தனது மகன் அம்முவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அம்முவின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்