மெரினாவால் உடைந்த கட்சிகள்: அடுத்து திமுகவில் நடக்கப்போவது என்ன?

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழக வரலாற்றினை பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் தலைவரை மெரினாவில் அடக்கம் செய்தாலும் சில மாதங்களிலேயே கட்சி இரண்டாக உடைந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தியாவினை பொறுத்தவரை கட்சிகள் இணைவதற்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் கட்சிகள் உடைவதற்கு சித்தாந்தச் சிக்கல் மற்றும் தன்முனைப்பு என்ற இரண்டே காரணங்கள் மட்டும் தான் உள்ளன.

சிந்தாந்த சிக்கல்களை கூட அரசியல் தலைவர்கள் பேசி தீர்த்து கொள்கின்றனர். ஆனால் பதவி ஆசை, கட்சியில் முக்கிய பொறுப்பு போன்றவற்றை உள்ளடக்கிய தன்முனைப்பினாலேயே இதுவரை தமிழக கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன.

அண்ணாவின் திமுக உடைந்த கதை:

இந்திய சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சியின் மூலம் தமிழகத்தில் ஆட்சி அமைத்தவர் அறிஞர் அண்ணா. "திராவிட முன்னேற்ற கழகம்" என்னும் பெயரில் கட்சி நடத்தி அந்த அண்ணாவிற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.

அவர் உயிருடன் இருந்தவரை கட்சியில் மிகப்பெரிய தூண்களாக இருந்த சம்பத், கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அவர்கள் இறந்த பின்னர் தங்களுக்குள் போட்டி போட ஆரம்பித்தனர்.

அண்ணாவின் உடலை மெரினாவில் அடக்கம் செய்த சில மாதங்களிலே, கட்சியில் சினிமாகாரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக நினைத்து கட்சியிலிருந்து பிரிந்த சம்பத் புதிதாக கட்சி துவங்கினார். அதே சமயம் கருணாநிதி - எம்.ஜி.ஆர் இடையே இருந்த நீயா? நானா? யுத்தத்தால் கட்சியிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் "அதிமுக" என்று கட்சியினை உருவாக்கினார்.

எம்.ஜி.ஆரின் அதிமுக உடைந்த கதை

மக்களிடையே தான் வைத்திருந்த எளிமையான பழக்கத்தின் மூலம் கட்சியினை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்திருந்தார் எம்ஜிஆர்.

ஆனால் அவரது இறப்பிற்கு பின்னர் உடலை மெரினாவில் அடக்கம் செய்த சில நாட்களிலே அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி), திருநாவுக்கரசுவின் எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீ-யின் எம்.ஜி.ஆர் என்ற 4 கட்சிகளாக அதிமுக உடைந்தது.

ஜெயலலிதாவின் அதிமுக உடைந்த கதை

தமிழக அரசியல் தளத்தில் ஆண் அரசியல்வாதிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்த கட்டத்தில் தனி ஒரு பெண்ணாக, ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்தவர் ஜெயலலிதா.

சென்னை அப்பல்லோ மருத்துவனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று ஜெயலலிதா உயிரிழந்து, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், அதிகமுகவிற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவின.

தற்போது அதிமுக கட்சி எண்ணிலடங்கா கிளைகளாக பிரிந்து, யாருடைய தலைமையில் அதிமுக இருக்கிறது என்ற சந்தேகத்தினை மக்கள் மனதில் எழுப்பும் வகையில் கட்சி உள்ளது.

என்ன நடக்கப் போகிறது திமுகவில்?

வாழக்கையில் அரசியல் மற்றும் தமிழ் பற்றுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல தலைவர்கள் மற்றும் மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தவர் கலைஞர் கருணாநிதி.

போராட்டம் குணம் ஒன்றினை மட்டுமே இலக்காக கொண்டிருந்த கருணாநிதி, இறந்த பின்னரும் கூட மெரினாவில் இடஒதுக்கீட்டிற்காக போராடி வெற்றியடைந்தார்.

அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், மெரினா என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறது என்பதுவே தற்போதைய பெரும் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers