திடீர் நெஞ்சுவலி: 43 பேரை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரை காப்பாற்றி பேருந்து ஓட்டுநர் தனது உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் மது(48). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர், நேற்று இரவு கோட்டயத்தில் இருந்து மலப்புரத்தில் உள்ள புத்தன் அத்தானி எனும் இடத்திற்கு 43 பயணிகளுடன் பயணித்தார்.

ஆனால், அவர்கள் சென்ற சாலை மலைப்பகுதி போன்றதாகும். அந்த பாதையில் 10 முதல் 100 அடி வரை பள்ளம் உள்ளது.

பேருந்து கோட்டைக்கல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநர் மதுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

எனினும், மது தனது நெஞ்சை பிடித்தபடி பேருந்தை ஓட்டினார். ஆனால், பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சமுற்று அலறினர்.

பேருந்து சென்ற பாதையில் ஒரு புறம் பள்ளம், எதிர்புறம் ராட்சத மரம் என்று இருந்ததால் மது பேருந்தின் வேகத்தை குறைக்க Hand Brake-ஐ பிடித்தவாறே ஓட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதனால், ராட்சத மரத்தில் மோதாமல் பேருந்து நின்றது. பயணிகள் எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து, பயணிகள் ஓட்டுநரிடம் சென்று பார்த்தபோது அவர் Steering-ஐ பிடித்தவாறு மயங்கி கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர், தங்களது உயிரை காப்பாற்றி தனது உயிரை விட்ட மதுவின் உடலுக்கு, குறித்த பயணிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக கோட்டைக்கல் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers