மானமுள்ள தமிழர்கள் போராட வேண்டும்! நெஞ்சு பொறுக்கவில்லை: இயக்குநர் கவுதமன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். பலர், படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகியுள்ள இயக்குநர் வ.கவுதமன் கூறியதாவது,

“நானும் போராட்டத்தில் கைதாகி இருக்கிறேன். இது தாங்கிக்கொள்ள முடியாத வன்முறை. தமிழனாகப் பிறந்த யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நெஞ்சு பொறுக்காமல், நிலைகொள்ள முடியாத சூழ்நிலையில் தான் சிறைக்குச் செல்கிறேன். தமிழினம் இதை ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று நம்புகிறேன்.

மாணவர்கள், இளைஞர்கள், மானமுள்ள தமிழர்கள் அனைவரும் இறந்துபோன உயிர்களுக்காக உறுதியாக நின்று போராட வேண்டும். ஸ்டெர்லைட்டுக்காகத் தூத்துக்குடியில் இறந்துபோன மக்களைப் போல, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இறப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்தான் நாம் இன்று நிற்கிறோம்.

விவசாயிகளை இழந்து, மீனவர்களை இழந்து, மாணவர்களை இழந்து, தூத்துக்குடியில் நம் மக்களை இழந்ததற்குப் பிறகும் மானத்துடன் இருக்கும் தமிழர்கள் வீட்டில் இல்லாமல் வீதிக்கு வந்து போராடி நம் உரிமையையும் மண்ணையும் நிலத்தையும் வளத்தையும் மொழியையும் காக்க வேண்டும் என்று சிறையில் இருக்கும் ஒரு தமிழனாக கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நிச்சயம் போராடுவார்கள் என்று நம்பி நான் காத்துக் கொண்டிருக்கிறேன், இறந்துபோன உயிர்களும் அப்படித்தான் நம்புகின்றன. சிறையிலேயே நான் இறந்துவிடலாம், சுட்டுக் கொல்லப்படலாம். என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. வாழ்ந்தால், ஒரு நொடியாவது மானத்துடன் வாழ்ந்த தமிழனாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அதுபோல் ஒட்டுமொத்தத் தமிழினமும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழினமும் இதற்காகப் போராட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்