துத்துகுடியில் கலவரம், வாகனங்கள் எரிப்பு: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததால், பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பலியாகியுள்ளார்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டனர். ஆனால், தடையை மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

விவிடி சிக்னல் அருகே போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் வந்தபோது, பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அதனால், பொலிசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர், பொலிஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். அத்துடன் பொலிஸ் வாகனத்தையும் அவர்கள் கவிழ்த்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பொலிசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், செல்லும் இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர்.

இந்நிலையில், பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன் பின்னர், பொலிசாரால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் அலுவலகத்தில் நுழைந்தனர். மேலும், அலுவலகத்தில் உள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதேபோல மற்றொரு தரப்பு போராட்டக் குழு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும், தூத்துக்குடியில் சிறிய ரக பேருந்துகள், கட்டண பகிர்வு ஆட்டோக்கள் ஆகியவை இன்று இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers