பொலிஸ் காவலில் இறந்த நபர்: குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொலிஸ் காவலில் மரணம் அடைந்த வாலிபரின் மனைவிக்கு, அரசு வேலை மற்றும் ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பரவூர் வராப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித், இவரது மனைவி அகிலா(26). அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரியை, ஸ்ரீஜித் தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸ் காவலில் அவரிடம் வராப்புழா பொலிசார் விசாரணை நடத்தினர், அப்போது ஸ்ரீஜித்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர், உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பொலிசார் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஜித் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீஜித் மீது பொய் வழக்குப்பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொலிசாரை கண்டித்து எதிர் கட்சியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, கேரள அரசு ஐ.ஜி மட்டத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, நடந்த விசாரணையைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர் மற்றும் மூன்று பொலிசார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மரணமடைந்த ஸ்ரீஜித் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது ஸ்ரீஜித்தின் மனைவிக்கு பரவூர் தலூகா அலுவலகத்தில் கிளார்க் வேலை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10 லட்சம் மாநில அரசின் நிதியும் வழங்கப்பட்டது. ஸ்ரீஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபீருல்லா, ஸ்ரீஜித்தின் மனைவி அகிலாவிடம் வேலைக்கான உத்தரவு மற்றும் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்