மருத்துவமனையில் கொல்லப்பட்ட தொழிலதிபர்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரை, கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டவுன் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ரவிராஜா(54). Real Estate தொழில் செய்து வந்த இவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்குள் நுழைந்த நபர் ஒருவர், சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை, தான் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு அறுத்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை தடுக்க முயன்றனர். ஆனால், குறித்த நபர் அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டியதால், அவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன் பிறகு, குறித்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் படுகாயம் அடைந்த ரவிராஜா, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து விசாரித்தபோது, கொலை செய்த நபர் சென்னையை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேற்கட்ட விசாரணையில், சந்துரு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரவிராஜாவிடம் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்.

இதனால் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, இதனையடுத்து தப்பியோடிய சந்துருவை சோதனைச் சாவடியில் பொலிசார் காருடன் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்