மீனவர்களை சந்தித்த கமல்ஹாசன்: நவீன படகு வாங்க ரூ.5 லட்சம் அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா
74Shares
74Shares
ibctamil.com

மக்கள் நீதி மய்யத்தின் கட்சித்தலைவர் கமல்ஹாசன், கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க நவீன படகு வாங்க ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘மக்களுக்கான பயணம்’ எனும் பெயரில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கிய கமல்ஹாசன், அங்குள்ள காந்தியடிகள் மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசினார். அவர் கூறுகையில்,

‘கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 42 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவனாக வந்துள்ளேன். அதன் பிறகு படப்பிடிப்புக்காகவும், பயணங்களின் பொருட்டும் வந்துள்ளேன்.

இப்போது இங்கு வந்திருப்பது, உங்களை சந்தித்து, உங்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் தான்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், இப்போது கல்விப்பயணம் செய்கிறேன். இதன்மூலம் உங்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் அறிந்துகொள்வேன்’ என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரியை அடுத்துள்ள தென்தாமரைகுளத்தில் விவசாயிகள் மத்தியிலும், மணக்குடியில் மீனவர்கள் மத்தியிலும் அவர் பேசினார்.

அதன் பின்னர், குளச்சல் காணிக்கை மாதா மண்டபத்தில் மீனவர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தங்களை ஏன் பார்க்க வரவில்லை என மீனவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல், ‘அப்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தேன். அதனால்தான் வர முடியவில்லை. இப்போது உங்களை பார்க்க வந்துள்ளேன்.

இனி உங்களுக்கு பலமாக இருப்பேன். நான் மீனவர்களின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளவே வந்துள்ளேன். புயலின்போது காணாமல் போன மீனவர்களின் முழு விவரங்கள் தெரியவில்லை. உங்களின் பாதுகாப்புக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்’ என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஒக்கி புயலின் தாக்கத்தினால் காணாமல் போன மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அங்கு வந்தனர்.

கடலில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிக்கு, அரசு இதுவரை நவீன படகு வழங்காததால், மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் நவீன படகு வாங்க இருப்பதாகவும், அதற்காக நிதி சேமித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது நவீன படகு வாங்க தனது சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்த கமல், ‘இது எனது கட்சியில் இருந்து அல்ல. ஒரு நடிகன் என்ற முறையில் நிதி வழங்குகிறேன்’ என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கருங்கல், சின்னத்துறை, களியக்காவிளை, அழகிய மண்டபம், தக்கலை, ஆசாரிபள்ளம் பகுதிகளில் மக்களை சந்தித்த அவர், நேற்று இரவில் அங்கு அண்ணா விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். இரவு கன்னியாகுமரியில் தங்கிய அவர், இன்று திருநெல்வேலி மாவட்டம் செல்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்