பாலியல் பலாத்கார குற்றவாளிகளிடம் பேரம் பேசிய பெற்றோர்! மகள் வெளியிட்ட திடுக் தகவல்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளை, நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை பெற்றோரே மாற்றி கூற வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பிரேம் நகர் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி கடத்தப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அமன் விஹார் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட ஒரு வாரத்தில் சிறுமி வீடு திரும்பியுள்ளார். தன்னை அப்பகுதியைச் சேர்ந்த இருவர் கடத்தியதாகவும், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியை கடத்திய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பணம் நிறைந்த பையுடன் சிறுமி காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, தனது பெற்றோர் குற்றவாளிகள் தரப்பில் இருந்து பணம்பெற்றுக் கொண்டு, தன்னை வாக்குமூலத்தை மாற்றி கூறுமாறு கட்டாயப்படுத்தியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், பொலிசார் சிறுமியின் பெற்றோர் மீது பொய்யான ஆதாரங்களை கூற அச்சுறுவத்துவது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக பொலிசார் கூறுகையில், ‘சிறுமியின் பெற்றோர்களிடம் குற்றவாளிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்க வாக்குறுதி அளித்துள்ளனர்.

அதன்படி முதல்கட்டமாக ரூ.5 லட்சத்தை சிறுமியின் பெற்றோர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்ட சிறுமியின் பெற்றோர், அதனைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றி கூற கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஆனால், சிறுமி பெற்றோரின் வற்புறுத்தல் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து சிறுமி பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது வீட்டின் படுக்கைக்கு கீழே இருந்த பணப்பையுடன் காவல்நிலையம் வந்து விவரத்தை தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியின் பெற்றோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வரும் பொலிஸார், சிறுமியை மீட்டு குழந்தைகள் நலவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers