வாழத் தகுதியற்ற பகுதியானது தமிழ்நாடு: பகீர் கிளப்பும் ராணுவ மண்டல பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விளைநிலங்களை அழித்து அந்தப் பகுதியை வாழத் தகுதியற்றதாக மாற்றுவதே ராணுவ மண்டலம் அமைக்கும் திட்டத்தின் நோக்கம் எனவும், அது நிறைவேறிவிட்டதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறியுள்ளார்.

சுந்தர்ராஜன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் இனி எஞ்சியிருக்கும் விளைநிலங்களையும் விஷ நிலங்களாய் மாற்ற வேண்டியது மட்டும் தான் பாக்கி.

காவிரி உரிமைக்காக, தமிழ்நாடே போராடும் நேரத்தில், `டிஃபென்ஸ் எக்ஸ்போ-வை', இங்கே நடத்த வேண்டிய தேவை என்ன? காவிரியில் தண்ணீர் வராததற்கும் இந்த `டிஃபென்ஸ் எக்ஸ்போ'-க்கும் இடையேயான தொடர்பை நாம் சந்தேகத்துடன் தான் அணுக வேண்டியிருக்கிறது.

தமிழகத்தை ராணுவ மண்டலமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு வேகமாக முன்னேறி வருவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பாதுகாப்பு தொடர்பான வளாகத்தில், மின்உற்பத்தி நிலையம் என்று சொல்லப்பட்ட கல்பாக்கம் ஏன் இணைக்கப்பட்டது என்ற கேள்வியை முன்னரே எழுப்பினோம். இந்தியாவின் அணுகுண்டு தயாரிப்புத் திட்டத்தில் கல்பாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளை வாழத் தகுதியற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் மத்திய அரசிடம் இருப்பது போல் உள்ளது.

அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பூமிக்குக் கீழ் இருக்கும் வளம்; இரண்டாவது முன்னரே சொன்ன பாதுகாப்பு மண்டலம்.

பாகூர் முதல் ராமநாதபுரம் வரை 135 ஆண்டுகளுக்கு எடுக்கக்கூடிய நிலக்கரி படிமங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் தான் தமிழகத்தின் கிட்டத்தட்ட 40% உணவு உற்பத்தி நடைபெறுகிறது.

அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம். விவசாயத்துக்குத் தேவையான நீர் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று ஆற்று நீர், மற்றொன்று நிலத்தடி நீர். ஆறு என்பது இங்கே காவிரி தான்.

அந்த நீரைக் கிடைக்காமல் செய்வதன் மூலம் விவசாயம் படிப்படியாகக் குறைந்து, மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுவார்கள். இன்னொருபுறம் நிலத்தடி நீரை மாசுபடுத்தவே ஹைட்ரோ கார்பன் திட்டம் இருக்கிறது.

அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மக்கள் படிப்படியாக விவசாயத்தை தவிர்த்துப் பிழைப்பு தேடி பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்வார்கள். அதன் பிறகு அவர்களின் நிலக்கரி வேட்டையைத் தொடங்கலாம் என்பது மத்திய அரசின் நீண்டகாலத் திட்டம்.

இதை கூறுவதன் மூலம் நாங்கள் பீதியைக் கிளப்புகிறோம் என்று சில விஞ்ஞானிகளும், சமூக ஊடக ஆர்வலர்களும் கூறலாம்.

ஒன்றுக்கு மூன்றுமுறை தெளிவாகச் சொல்கிறோம். இது சந்தேகம்தான். எங்களின் கருத்து இல்லை, இப்போது நிரூபிக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்