நாம் தமிழர் கட்சியினரே காரணம்: வைகோ கண்ணீர்

Report Print Athavan in இந்தியா

நாம் தமிழர் கட்சியினரின் அவதூறு மீம்ஸ்களால் தான் மனமுடைந்து மருமகன் சரவண சுரேஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ் இன்று காலை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் அருகே உடலில் பெட்ரோலைத் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

உடனே, அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். 90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்துள்ள அவருக்கு தற்போது அப்பலோ மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பலோ மருத்துவமனைக்கு சென்று சரவண சுரேசின் உடல் நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கதறி அழுதார். மனதை தேற்றிக் கொண்டு பேசிய வைகோ, தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் 3 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் வெளியிடும் மீம்ஸ்களை பார்த்து என் குடும்பத்தினர் மன உளைச்சலில் இருக்கின்றனர்.

எனது குடும்பத்திலும் ஒருவர் தீக்குளித்து உடல் முழுவதும் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார், எவ்வளவோ பழியை தாங்கிக் கொண்டேன், என் குடும்பம் நொறுங்கிப் போயுள்ளது.

கையெடுத்து கும்பிக் கேட்கிறேன் தமிழ்நாட்டு இளைஞர்களே, காலில் விழுந்து கேட்கிறேன், தீக்குளிக்க வேண்டாம் என பேட்டியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்