பொலிசார் தாக்கும் போது கத்தினேன் யாரும் உதவிக்கு வரவில்லை என்று தாயார் ஒருவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை தீ.நகரின் போத்தீஸ் கடை அருகே இளைஞரை மூன்று பொலிஸ் அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் சுற்றி வளைத்து அடித்தனர். அப்போது அவரது தாயாரான சங்கீதா வேண்டாம் வேண்டாம் என்று கத்திய போது பொலிசார் தொடர்ந்து அடித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதுமட்டுமின்றி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அன்றைய சம்பத்தின் போது நடந்தது என்ன என்பது குறித்து பிரகாஷின் தாயார் சங்கீதா கூறுகையில், பொருட்கள் வாங்குவதற்காக தி.நகர் சென்றோம்.
பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பும் போது, எனது மகன் பிரகாஷை பொலிசார் மறித்து ஏன் ஹெல்மேட் போடவில்லை என்று கேட்டனர்.
பொருட்கள் அதிகம் உள்ளதால் போடமுடியவில்லை என்றும், மூன்று பேர் ஏன் வந்தீர்கள் என்று குறித்து கேட்ட போது, அம்மா வீட்டுவேலை செய்து பிழைப்பவர். எங்களுக்கு வசதி இல்லை. தி.நகரில் கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருந்ததால் தங்கையையும் அம்மாவையும் சேர்த்து அழைத்து வந்ததாக பிரகாஷ் கூறினார்.
பொலிசார் அப்போ ஆட்டோவில் வர வேண்டியது தானே என்று கூறினர். ஆட்டோவில் வர வக்கில்லை என்றால் ஏன் தி.நகருக்கு ஷாப்பிங் வருகிறீர்கள் என்று கேவலமாய பேசியதுடன் பிரகாஷின் சட்டையை பிடித்து பொலிசார் இழுத்தார்.
அப்போது நான் விடுங்கள் என்று கூறியதால் அவர்கள் என் மீது கை வைத்தார்கள். அப்போது பிரகாஷ் என் இப்படி என்று கேட்ட போது அங்கிருந்த மூன்று பொலிசார் என் மகனை அடிக்க ஆரம்பித்தனர்.
நான் கத்தினேன், கதறினேன் பொதுமக்களை உதவிக்கு கூப்பிட்டேன். யாரும் உதவ முன்வரவில்லை.
பின்னர் என் மகனை அடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு வைத்தும் என் மகனைத் தாக்கினார்கள். மகன் தாக்கப்படுவதைப் பார்த்துக் கதறி அழுத என்னைப் பார்த்து நடிக்கிறாயா என்று கூறி அதன் பின் மருத்துவமனைக்கு போகச் சொன்னதாக கூறியுள்ளார்.
மேலும் எங்களைத் தாக்கிய பொலிசார் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகன் மீது மட்டும் வழக்கு போட்டுள்ளதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.