நடிகர் கமல்ஹாசன், காவிரி விவகாரம் குறித்து நிபுணர் ஒருவருடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த உரையாடலில் காவிரி நதி நீர் விவகாரம் குறித்த தெளிவான விளக்கத்தை, Madras Institute Of Development Studies-யின் தலைவரும், பேராசிரியருமான S.ஜனகராஜன் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மிக முக்கியம். ஆற்றில் எந்த அளவு மணல் உள்ளதோ, அந்த அளவு நிலத்தடி நீரை நாம் சேமித்து வைக்க முடியும்.
ஆனால், ஆற்றிலிருந்து மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீரை நாம் இழந்து வருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் உப்பு தண்ணீரின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது.
டெல்டா என்பது உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியாகும்.ஆற்றிலிருந்து வரும் வண்டல் மண்ணானது, கடலில் இருந்து டெல்டாவை உயர்த்தி காட்டுகிறது. இல்லையேல் கடல் நீர் உள்ளே புகுந்து விடும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை பொழியும் போது தான் ஆற்றில் தண்ணீர் வருகின்றது. ஏனைய மாதங்களில் நதியானது வறண்டு காணப்படுகிறது.
பிச்சாவரம் முதல் வேதாரண்யம் வரை கடல் அரிப்பானது அதிகரித்துள்ளது. கடந்த 1971ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டு வரை நாம் 20 சதவித டெல்டா நிலங்களை இழந்துவிட்டோம்.
எனவே, டெல்டாவை பாதுகாக்க வேண்டும். அதற்காக டெல்டா நிலங்களுக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
கடல் தண்ணீர் உள்ளே வருவதை தடுக்க வேண்டும். காவிரி நீரை பெறுவதில் காட்டும் தீவிரத்தைப் போல, டெல்டா நிலங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் முயல வேண்டும்.
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 60 சதவித நிலம் காவிரிபடுகையில் அமைந்துள்ளது. எனவே, காவிரி நீர் இல்லை என்றால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடையும்’ என தெரிவித்துள்ளார்.